புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா, கல்லூி முதல்வர் எஸ். சந்திரமோகன் தலைமையில், கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று (21.12.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்னவின் தமிழ் விவகார பொறுப்பாளர் கவாஸ்கர் உட்பட சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்னம் கலந்து சிறப்பித்தார்.
விசேட அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவிக் கல்வி பணிப்பாளரும், புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆர். விஜேந்திரன் அ பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜாவும், (பழைய மாணவர்), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிர்வாகப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐ. ரவிக்குமாரும், (பழைய மாணவர்), சட்டத்தரணி ஓமரும், ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணகாந்தி அம்மையாரும், கலாநிதி கீர்த்தி ஶ்ரீ தேசமான்ய கிருஷ்ணன் கிருஷ்ணகுமாரும், கீர்த்தி ஶ்ரீ – தேசமான்ய தேவராய பிள்ளை கதிரேசனும் கலந்துகொண்டனர்.
புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களும் தற்போது அதிபர் மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றும் பாரிஸ்டர் மோகன் புவனேஸ்வரன், விக்னேஸ்வரன் உட்பட பழைய மாணவர்களும், வங்கிகளில் முகாமையாளர் மற்றும் பிரதி முகாமையாளர்களாக பணியாற்றுபவர்களும் அதிதிகளாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கல்லூரியின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிய – சேவையாற்றிக்கொண்டிருக்கும் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ஐயா நிகழ்வின்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், தலைமை உரையையும் நிகழ்த்தினார்.
அதேபோல கல்லூரியின் வளர்சிக்கு பெரும் பங்காற்றிய ஆர். விஜேந்திரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார். அவர் சிறப்புரிமையும் ஆற்றினார். நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜா விசேட உரையும், ஊடகவியலாளரும், பழைய மாணவருமான ஆர். சனத் வரவேற்புரையையும் ஆற்றினர்.
பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள், விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள், வலய, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவ அதிதி, விசேட அதிதிகளால் சான்றிதழும், நினைவுப்பரிசில்களும் வழங்கிய பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோல புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரதி அதிபர் கஜீதா ஒமர் அம்மையார், சிரேஷ்ட ஆசிரியர் வசந்தி அம்மையார், சிரேஷ்ட ஆசிரியர் ருக்மணி ஆகியோரும் பழைய மாணவர்கள் சங்கத்தினர், கௌரவ அதிதிகளின் பங்கேற்புடன் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கான நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளராக, கல்லூரியின் வளர்ச்சிக்கு மகத்தான சேவையாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. பா. திருஞானம் அவர்களின் சேவையை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
20 வருடங்களுக்கு மேலாக கல்விசாரா ஊழியராக கல்லூரியில் பணியாற்றி வரும் கோபாலும் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர்.
விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பழைய மாணவர் சங்க செயலாளரை அதிபர், கௌரவ அதிதி, சிறப்பு அதீதி உட்பட பலரும் பாராட்டினர்.
விழா வெற்றிகரமாக நிறைவுபெற ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்களான வினோஜ், தவக்குமார் ஆகியோரும் செயலாளரால் நினைவு கூறப்பட்டனர். அதேபோல கௌரவிப்பு விழாவுக்கான அனுசரணையை வழங்கி இருந்த பழைய மாணவர் எம். பாலசுப்ரமணியம் அவர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, நன்றியுரை ஆற்றிய பழைய மாணவர் சங்க செயலாளர் கவாஷகர், கொழும்பில் இருந்து செயற்படும் பழைய மாணவர்களுக்கும் இணைந்து பயணிக்க அழைப்பு விடுத்தார். கல்லூரியின் வளர்ச்சியே பிரதான நோக்கம் என்பதால் அனைவரும் ஒன்றியைண வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடகவியலாளர் மகேஸ்வரன், பெற்றோர் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நிகழ்வை ஆசிரியை திருமதி கவாஸ்கர் லோஜி பிரியா இரு மொழிகளும் மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.
(க.கிஷாந்தன்)