பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உடப்ட்ட நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஜிந்துபிட்டியவைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 20.55 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ‘படோவிட அசங்க’ என்ற பாதாள ஒலக கும்பல் தலைவரின் ஆதரவாளர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள பலாரஸ் மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய இரு இளைஞர்கள் மீது முச்சக்கரவண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் , துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த முச்சக்கரவண்டி பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.