இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10ம் தேதி) காலமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதல்அமைச்சர் விஜய் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.




