மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்

0
77

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னரால் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று அந்நாட்டு அரண்மனை இன்றைய தினம் (24) தெரிவித்துள்ளது.

அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாட்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. எனினும் இம்முறை எந்தவோர் அரசியல் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அணிகளை அமைக்க அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன.

இம்முறை அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்), மொஹைதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பெரிக்கத்தான் நேசனல்), இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்துள்ள அம்னோ கட்சி இடம்பெற்றிருக்கும் தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்), முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான ஜிடிஏ ஆகிய நான்கு கூட்டணிகள் தேர்தல் களம் கண்டன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கும், மகாதீர் தரப்புக்கும் சாதகமாக அமையவில்லை. நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 2018ஆம் ஆண்டு, 14ஆவது பொதுத்தேர்தல் வரை நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணி (பாரிசான்), இம்முறை முப்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மறுபக்கம் மகாதீர் தமது தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், அவரது கூட்டணியும் படுதோல்வி கண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here