மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36000 பேருக்கு தடுப்பூசி 14000 பேர் பூர்த்தி.

0
93

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36000 பேருக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வரை சுமார் 14000 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி துறைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும், மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்திலும் பெற்றுக்கொடுக்க இன்று (20) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

மலையகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருகின்றன. இதில் முக்கிய ஒன்றாக தடுப்பூ வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இது வரை எமது மஸ்கெலியா பொது வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் 60 வயத்திற்கு மேற்பட்ட சுமார் 14000 பேருக்கு சைனோபார்ம் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி மஸ்கெலியா பகுதியில் சுமார் 78000 பேர் வாழ்கின்றனர் அவர்களில் 50 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. இன்று 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 6000 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் அசமந்த போக்கினை காட்டிய போதிலும் தற்போது மிகவும் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனர். எது எவ்வாறான போதிலும் தடுப்பூசி போடுவதனால் மாத்திரம் இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்த முடியாது மக்கள் எந்நேரமும் சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் 13 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இன்றும் பல இடங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here