நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி முதல் இன்று (22) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான காலநிலையின்படி, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நேற்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கலஹிட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியின் மின்சார விநியோகக் கட்டமைப்பிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையினால் அசௌகரியங்களுக்கு உள்ளான 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேருக்கு தற்போது 3 பாதுகாப்பான நிலையங்களில் தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.




