வெறுமனே குறைகூறும் – விமர்சிக்கும் அரசியல் இனியும் வேண்டாம். நாட்டை மீட்க அரசியல், கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்

0
83

” நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் முறைமையை மக்கள் வெறுத்துள்ளனர். இளைஞர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிச்செல்கின்றனர். எனவே, வெறுமனே குறைகூறும் – விமர்சிக்கும் அரசியல் இனியும் வேண்டாம். நாட்டை மீட்க அரசியல், கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.

நுவரெலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (22.12.2022) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்வது புரிகின்றது. எனினும், தற்போதைய இக்கட்டாய சூழ்நிலையை கடக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

” நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் பிரதேசமாகும். அதேபோல அந்திய செலாவணியும் ஈட்டப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மந்தபோசன பிரச்சினையும் இருக்கின்றது. அதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். கடந்த மே மாதம் அளவில் உரப்பற்றாக்குறை இருந்தாலும் தற்போது நிலைமை சீராக்கப்பட்டுள்ளது.

நாம் தற்போது உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தால் அடுத்தவருடம் உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படலாம். எனவே, எமது உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தொடர வேண்டும். ரஷ்யா – உக்ரைன் பிரச்சினை தீர்ந்தால் அத்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம். இல்லையேல் தொடரவேண்டும்.

பணவீக்கத்தால் மக்கள் கஷ்டத்துக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். 2023 ஜனவரியில் கொப்பிகளை வாங்குவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நாம் மக்கள் படும் துன்பத்தை மறக்கவில்லை. அடுத்த வரும் நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்.

உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அரசியலுக்கு அப்பால் கொண்டு செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஒருமித்த கருத்துக்கு அனைவரும் வரவேண்டும். இதைவிட மாற்றுவழி இல்லை.

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அரசியல் செய்தது இல்லை. அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தினேன். ஒத்துழைப்பு கோரினேன். ஆனால் சிலர் பழைய முறையிலேயே அரசியல் நடத்த முற்படுகின்றனர். விமர்சனங்களை மட்டும் முன்வைக்கின்றனர். உரிய வேலைத்திட்டங்கள் இன்றி, விமர்சிப்பதில் பயன் இல்லை. நாட்டு மக்கள் அரசை மட்டும் விமர்சிக்கவில்லை, முழு நாடாளுமன்றத்தையும் விமர்சிக்கின்றனர். எனவே, மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here