வேலுகுமார் எம்பி கோப் குழுவிலிருந்து விலகியதற்கு அரசியல் காரணங்கள் கிடையாது – அமைச்சர் மனோ கணேசன்!

0
93

பொது முயற்சியான்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து (கோப் குழு) ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமார் ராஜினாமா செய்தமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கண்டி மாவட்டத்தின் புதுமுக எம்பியான வேலுகுமார், ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரின் சபை தலைமைக்குழு, அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழுவின் கீழ்வரும் பொது நிர்வாக உபகுழு, மனிதவள அபிவிருத்தி, கல்வி ஆகிய அமைச்சுகளின் கண்காணிப்பு குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்றார். இந்நிலையில் அவரால் முழு நேரத்தையும் இந்த குழுக்களில் செலவிட்டு விட்டு, கண்டி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒருசேர முன்னெடுப்பதில் காலநேர பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கட்சி தலைமையுடனான கலந்துரையாடலின் பின்னரே அவர் பொது முயற்சியான்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து விலகும் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இதில் வேறு எந்த அரசியல் நோக்கங்களும் கிடையாது.
பொது முயற்சியான்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த குழுவின் தலைவர் நண்பர் சுனில் ஹன்துன்நெத்தியின் தலைமைத்துவம் மீது தனிப்பட்டமுறையில் எனக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் முழுமையான நம்பிக்கை உண்டு. புதிய மத்திய வங்கி ஆளுநர் எவ்விதமாக கோப் குழுவுடன் ஒத்துழைக்க போகின்றார் என்பதை நாம் அக்கறையுடன் அவதானிக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here