தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கியதாக குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடாவடி அரசியல்
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியதற்காக எராஜ் பெர்னாண்டோ சிறைத்தண்டனை பெற்றிருந்தார்.
2014 ஆம் ஆண்டில் மத்தளை விமான நிலையத்திற்கு கண்காணிப்பிற்குச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தாம் வைத்திருந்தது போலி துப்பாக்கி என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மீது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மறுகணம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.