இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபாய் பணத்திற்காக பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 21 வயதுடைய நபர் ஆவார்.
கொலை செய்யப்பட்ட குறித்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், குறித்த சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வீதியில் தங்கியிருந்து அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார்.
அப்பெண் கொடுக்க மறுத்ததையடுத்து கத்தியால் மூன்று இடங்களில் குத்தியுள்ளார். பின்னர் சந்தேக நபர் அந்த பெண்ணின் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், கத்திக்குத்திற்கு இலக்கான குறித்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
போதைக்கு அடிமையான குறித்த சந்தேகநபர், கசிப்பு குடிப்பதற்காகவே அப்பெண்ணிடம் பணம் கேட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.