ஸ்பெயினின் கானரி தீவுகளில் எரிமலை வெடித்துச் சிதறி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டின் கானரி தீவுகளில் இருக்கிறது லா பால்மா எரிமலை. இந்த எரிமலை கடைசியாகக் கடந்த 1971 ஆம் ஆண்டு வெடித்தது.
அதனையடுத்து இப்போது புதிதாக வெடித்துச் சிதறி வருகிறது. எரிமலை வெடிப்பதற்கு முன்னதாக 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுமார் 5000 பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். லா பால்மா பகுதியில் 85,000 மக்கள் வசிக்கின்றனர்.
எரிமலை வெடித்ததுமே எல் பாசோ என்ற கிராமத்தில் தான் முதலில் எரிமலைக் குழம்பு வெளியேறியது. அந்தப் பகுதியில் இருந்த 8 வீடுகள் சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்பெயின் நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையத் தலைவர் இத்தாசியா டொமின்குவெஸ் கூறுகையில், எவ்வளவு காலம் எரிமலை வெடிக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. கடந்த முறை வெடித்தபோது பல மாதங்கள் எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டது என்றார்.
எரிமலை சீற்றத்தால் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்கவிருந்த பயணத்தை அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தள்ளிவைத்துள்ளார்.