அனைவருக்கும் ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளை 1,000 பாடசாலைகளாக அதிகரிப்பதற்கும், ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக நேற்றைய தினம் (08) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
10. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்
ஆங்கில மொழியின் க.பொ.த (சா/த) பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4,441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுவதுடன், பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024 ஆம் ஆண்டில் 1,000 பாடசாலைகளாக அதிகரித்து ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரைக்கும் அதிகரிப்பதற்கும், அதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களும் கல்வி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.