நோர்வூட் பொகவந்தலா பிரதான வீதி 272 நாளில் காபட் இட்டு புனரமைக்க ஆரம்பித்த வீதி இரண்டு வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை.பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டு காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட குறித்த கடந்த அரசாங்க காலத்தின் போது ஒரு லட்சம் கிலோ மீற்றர் காபட் வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 2020.05.06 ம் திகதி 1250 ரூபா மில்லியன் ரூபா செலவில் 21 கிலோமீற்றர். நோர்வூட் தொடக்கம் கெம்பியன் வரை 6.5 மீற்றர் அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
கொரோனா தொற்றும் மற்றும் மழை காரணமாக தாமதமடைந்தன.அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து இரண்டு வருடத்திற்கும் மேலாக கைவிடப்பட்டிருப்பதாகவும் இதனால் இன்று பலங்கொட பொகவந்தலா, டின்சின், கெம்பியன், ராணிக்காடு லொயினோன், கர்கஸ்வோல்ட், எலிபொட, சென்ஜோன்டிலரி, உள்ளிட்ட தோட்டங்களையும் நகரங்களையும் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொவந்தலா பிரதேச வைத்தியசாலையிலிருந்து ஒரு நோயாளியினை மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கோ அல்லது நாவலபிட்டி கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதென்றால் கூட குறித்த வீதியின் ஊடாகவே கொண்டு செல்ல வேண்டும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
கர்பினித்தாய்மார்கள் சிகிச்சைக்காகவும் கிளினிக் செல்லும் போதும் குறித்த வீதி மிகவும் மோசமான நிலையில் உடைந்து பாரிய குழிகள் வீதியில் காணப்படுவதனால் மிகவும் சிரமத்துடனேயே செல்கின்றனர்.
மழைக்காலங்களில் குழிகளில் மழை நீர் நிறைந்து வழிவதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.அது மாத்திரமின்றி தற்போது வரட்சியான காலநிலை காணப்படுகின்றது இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதனால் வீதியில் இரு மருங்கிலும் வாழும் மக்கள் சுவாச பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.பாடசாலை மாணவர்கள் வீதியில் செல்லும்; போது புழுதி படுவதனால் சீருடைகள் அழுக்கடைவதாகவும்,சிறிவர் நிலையங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் வீதி ஓரத்தில் வசிக்கும் சிறுவர்கள் புழுதி காரணமாக அடிக்கடி நோய்வாய்படுவதாகவும் இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் தனியார் வாகனங்கள்,முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறித்த வீதியினை பயன்படுத்துகின்றனர்;.
வீதியில் காணப்படும் குழிகள் காரணமாக அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதாகவும்,உரிய நேரத்திற்கு செல்ல முடியாது இடர்படுவதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாது சிரமப்படுகின்றனர்;.
தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் வீதியினை புனரமைப்பதாக தெரிவித்து வாக்குகளை மாத்திரம் பெற்று விட்டு பின்னார் பாராகமுகமாக இருந்து விட்டு;,முகநூல்களிலும் ஊடகங்களிலும் அறிக்கை விடுவதில் மாத்திரம் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
புனரமைப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு புல் முளைத்து துருப்பிடித்து காணப்படுவதாகவும் கல் மணல் உள்ளிட்ட பொருட்களும் வீணாக செல்வதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே குறித்த பிரதான வீதியினை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலைவாஞ்ஞன்