மோசமான காலநிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத ஆசிரியர்கள்; பெற்றோர் விசனம்!

0
115

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்ப்பட்ட மற்றும் அனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேசங்களில் காணப்படும் பிரதேசங்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

நாட்டின் பல மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்ப்பட்டுள்ளன.அதனை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த வாரம் இதுதொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் மற்றும் அபாயங்கள் உள்ள பிரதேசங்களில் பாடசாலைகளை நடாத்த முடியாத நிலைமை ஏற்படுமாக இருந்தால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் முழுமையாக பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தீர்மானம் எடுத்த பின்னர் அது தொடர்பாக மாகாண பாடசாலைகள் என்றால் மாகாண அல்லது வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் தேசிய பாடசாலையென்றால் தேசிய பாடசாலைகள் பணிப்பாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையத்திலும் கடந்த நான்கு நாட்களாக நீடித்து வரும் தொடர்ச்சியான மழையினால் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பீதுறுகாலதால மலை அடிவாரத்தின் கீழ் காணப்படுகின்ற நானுஓயா பிரதேசத்திற்குட்பட்ட கஸ்ட பிரதேச பாடசாலைகளான கிளாசோ,வங்கிஓயா இலக்கம் 1,2, ரதெல்ல,உடரதல்ல,கல்கந்தவத்தை, கிறேட்வெஸ்டன்,பாமஸ்டன், வட்டக்கொடை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையிலும் குடைகளை பிடித்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தனது உடைகளை நனைத்துக் கொண்டு புத்தக பைகளை நனைத்துக்கொண்டும் குளிருக்கு நடுங்கிக் கொண்டும் பாடசாலைகளுக்குள் நுழைந்து 2 மணிவரை பாடசாலையிலேயே இருக்கின்றனர்.

ஆனால் இப்பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களோ மழையை காரணம் காட்டி தமது விருப்பத்திற்கேற்றவாறு விரும்பிய நேரத்திற்கு பாடசாலைக்குச் செல்கின்றனர் மேலும் சில பாடசாலை அதிபர்கள் பாடசாலைக்கே வராமல் தனது குடும்ப அலுவல்களை கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்தவாறே தொலைபேசிகளில் பாடசாலையை நடாத்தி வருவதாகவும் இப்பிரதேச பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இக்காலநிலை சீரக்கேட்டினால் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிக குறைவாக காணப்படுகின்றபோதிலும் வருகைத்தருகின்ற மாணவர்களை 2 மணி வரை வைத்திருக்காமல் 12 மணியளவிலே அல்லது அதற்கு முன்பதாக விடுமுறை வழங்க அதிபர்களால் முடியும் அதனை அவர்கள் செய்யமறுக்கின்றார்கள் காரணம் அதிபர்கள் தங்களது நன்மதிப்பை மேலதிகாரிகளிடம் இழந்து விடக்கூடாது என்பதற்காக இந்த மாணவர்களை வைத்துக்கொண்டு 2 மணிவரை பாடசாலை நடாத்துகின்றனர்.

இந்த மலைப்பிரதேச பாடசாலைகளை சூழ்ந்து பாரிய மரங்கள் காணப்படுகின்றன தற்போது வீசும் கடுங் காற்றினால் இப்பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழும் சந்தர்ப்பங்களும் அதிகமாக காணப்படுகின்றது எனவே இப்பிரதேச பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே இவ்வாறான மலை பிரதேசங்களில் வாழும் இந்த மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என இப்பிரதேச பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேதீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here