வடக்கு ஆபிரக்க நாடான மொராக்கோவில் நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியின்போது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் சனிக்கிழமையன்று கிணற்றிலிருந்து மீட்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக அரச அரண்மை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 32 மீற்றர் (104 அடி) ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.
உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.
சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது.
மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் சனிக்கிழமை மாலை மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது சிறுவனின் பெற்றோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.