வரலாற்று சிறப்புமிக்க கண்டி மெதமஹாநுவர முருகா மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அகில இலங்கை சிவத்தொண்டர் பேரவை நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அகில உலக சைவத் தமிழ் ஒன்றியத்தின் தலைவர் திரு இளங்கோ நவரத்தினம் அவர்களின் தலைமையில் முருகாமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் பெரி. செல்லையா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கை எங்கும் உள்ள சிவ தொண்டர்களின் பங்கு பெற்றலில் இவ் அங்குரார்ப்பண நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந் நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரஜா சக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி ” சைவ நீதியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் சிவ தொண்டை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது எனது பெரும் பாக்கியம் ஆகும். எல்லாவற்றிற்கும் மூலவரான சிவனின் அருளால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களிடையே நல்லிணக்கத்தையும் பக்தியின் மகிமையையும் முக்திக்கான தேடலையும் மேற்கொள்ள நாம் முன் நின்று செயல்படுவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலேசிய நாட்டு அகில உலக சைவத்தமிழ் ஒன்றியத்தின் பிரதிநிதி திரு முனியாண்டி சடையாண்டி அவர்களும் ஒன்றியத்தின் இந்திய நாட்டுப் பிரதிநிதி திரு தமிழ்வேள் அவர்களும்
கண்டி வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக குழு தலைமைகளும், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் திருப்பணியை முன்னெடுக்கும் சிவ தொண்டர்களும் ஆசிரியர்கள் அதிபர்கள் சிவனடியார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக சிவனடியார்கள் பூஜித்து ஆராதனை செய்யக்கூடிய பத்து சிவலிங்கங்கள் திரு இளங்கோ நவரத்தினம் அவர்களின் நிதியுதவியோடு விஷேட யாக பூஜைகளுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட கோயில்களுக்கு முதல் கட்டமாக கையளிக்கப்பட்டன. கண்டி மாவட்டத்திலும் நுவரெலிய மாவட்டத்திலும் கேகாலை மாவட்டத்திலும் அமைந்துள்ள சிவ ஸ்தலங்களுக்கு அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் என் வாயிலாக புனிதமான சிவலிங்கங்கள் கையளிக்கப்பட்டன.
(க.கிஷாந்தன்)




