நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது

0
169

நாட்டில் இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் ஊடுருவியுள்ளமை அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால்தான் போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு காத்திரமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்கள் உட்பட அனைவரும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

அட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் அட்டன் ஹைலண்ஸ் கல்லுரி கேட்போர் கூடத்தில் இன்று (19.12.2022) இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ராமேஷ்வரன் கலந்து கொண்டார்.

அத்தோடு, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான கல்வி பணிப்பாளர் சு.முரளிதரன், அட்டன் வலய கல்வி பணிப்பாளர் திருமதி. ஏ.சத்தியேந்திரா, உதவி கல்வி பணிப்பாளர்கள் திருமதி, லக்ஷமி பிரபா, என்.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் மாத்தியாக்களால் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.அதாவது அதாவது போதைப்பொருள் வலையமைப்பானது இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலை வளாகத்திலும் பாடசாலை கொள்ளும் மாணவர்கள் மத்தியிலும் தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளுக்கு உரிய வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது மாணவ சமுதாயத்தை பாதுகாப்பதற்காக போலீசார்னதும் புலனாய்வு பிரிவினரும் ஒத்துழைப்பும் கூறப்பட்டுள்ளது. இதற்கு அமையவே இந்த காலப்பகுதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளிலும் அதேபோல பாடசாலைகளுக்கு வெளியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை ஈடுபட்டு வரும் நபர்களை தேடும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதியும் எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காகவும் பாடசாலைகளில் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைக்கு எவரும் அரசியல் சாயம் பூசக்கூடாது. பெற்றோர்களும் வீண் அச்சமடையவில்லை .வதந்திகளையும் நம்ப வேண்டிய தேவையும் இல்லை. இதற்கு பெற்றோர் பழைய மாணவர் சங்கத்தினர் கல்வி சாரா சமூகத்தினர் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேவேளை மலையகத்தில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே தடவையில் தீர்வை கண்டுவிட முடியாது. அவை கட்டம் கட்டமாக நிச்சயம் தீர்க்கப்படும்.அடுத்து நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் எனது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது அறிவித்து விட முடியாது. தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் உரிய முடிவு எடுக்கப்படும்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here