அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை

0
123

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் – என்று இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும். அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கவும் எனவும் அவர் கூறினார்.

யட்டியாந்தோட்ட எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான அண்ணாமலை பாஸ்கரன் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு இன்று (08.02.2023) மதியம் 3 மணியளவில் குறித்த தோட்டத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கைத்திட்டத்தை முன்வைத்து இன்று உரையாற்றினார். முக்கிய பல விடயங்களை எடுத்துரைத்திருந்தார். அவற்றில் குறிப்பாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலையக எம்.பிக்களுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதேபோல அமரர்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் சேவைகளையும் நினைவு கூர்ந்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது. அவற்றில் உள்ள விடயங்களை அமுல்படுத்த முழு ஆதரவும் வழங்கப்படும். அத்துடன், மலையக மக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

வடக்க, கிழக்கில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றும்போது 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக சிலர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 13 அநீதியானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரத்தை தரக்கூடிய பொறிமுறையாகும். அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். எனவே, 13 குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது. ” – என்றார்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here