அரசாங்க நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் விஞ்ஞான ரீதியான தீர்வாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்விரைவு பஸ் டிக்கெட்டுகளை விரைவில் வழங்குவதற்கு QR முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிராமிய வீதிகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தங்காலை, அம்பலாந்தோட்டை மற்றும் கதிர்காமம் டிப்போக்களுக்கு புதிய பஸ்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் 115 மில்லியன் பெறுமதியான 10 பஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் விஞ்ஞான ரீதியான தீர்வாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து துறை அமைச்சராக தாம் பதவியேற்கும் போது, பல அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் என்பன இழுபறி நிலையில் இருந்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
மேலும், பெரும்பாலான டிப்போக்கள் இலாபம் ஈட்டவில்லை எனவும், பஸ்களை திருத்துவதற்கு தேவையான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் எண்ணாயிரம் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பாலான டிப்போக்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதிய வருமானம் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழியர்களில் மிகச் சிறிய பகுதியினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டும் வருமானம் முழுவதையும் நிறுவனம் முறையாகப் பெற்றுக் கொண்டால் எந்த ஒரு டிப்போவும் நஷ்டத்தை சந்திக்காது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
“அரசு நிறுவனங்களில் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அறிவியல் பூர்வமான தீர்வாகும்.
அந்த நோக்கத்திற்காக, லங்காமா பஸ் டிக்கெட்டுகளை விரைவில் வழங்குவதற்கான QR முறையை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். அடுத்த இரண்டு மாதங்களில், இலங்கையில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துத் துறைகளும் QR முறையைப் பயன்படுத்தி டிக்கெட் வழங்கும் நிறுவனங்களாக மாற்றப்படும். அப்போதுதான் ஒவ்வொரு டிப்போவும் இலாபம் ஈட்ட முடியும்” என்றார்.