புதிய தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றியிடம் ஒலிம்பிக் இல்லத்தின் தங்க திறவுகோளை ஒப்படைக்கப்பட்டது!

0
3

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) புதிய தலைவராக ஸிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி கொவென்ட்றி உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (23) பொறுப்பேற்றார்.

சுவிட்சர்லாந்தின் லௌசேனில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகத்தில் நடைபெற்ற உணர்ச்சிபூர்வமான விழாவின்போது ஒலிம்பிக் இல்லத்தின் தங்கத்திலான குறியீட்டு திறவுகோளை கிறிஸ்டி கொவென்ட்றியிடம் தனது 12 வருட தலைவர் பதவி காலத்திலிருந்து விடைபெற்ற தோமஸ் பெக் ஒப்படைத்தார்.

தலைவர் பதவியிலிருந்து விலகிய தோமஸ் பெக், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வாழ்நாள் கௌரவத் தலைவராக இருப்பார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவியை தனது 41ஆவது வயதில் பொறுப்பேற்ற கிறிஸ்டி கொவென்ட்றி, 1894இல் பெரன் பியரே டி கூபேர்ட்டின் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒலிம்பிக் குழுவின் முதலாவது பெண் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

அத்துடன் அப் பதவியை ஏற்ற முதலாவது ஆபிரிக்கர் என்ற பெருமையை பெற்ற அவர், புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பத்தாவது தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றி ஆவார்.

ஸிம்பாப்வே தேசத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக 2018முதல் 2025 மார்ச் வரை பதவி வகித்த கிறிஸ்டி கொவென்ட்றி முன்னாள் நீச்சல் விராங்கனை ஆவார்.

ஏதென்ஸ் 2004, பெய்ஜிங் 2008 ஆகிய ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் மல்லாக்கு நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

இந்த இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களிலும் அவர் மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். உலக நீச்சல் சம்பியன்ஷிப்களிலும் பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் தங்கப் பதக்கம் வென்றவர்.

கடந்த மார்ச் 21ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தின்போது தேர்தல் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்றி தெரிவானார்.

முதல் சுற்று வாக்களிப்பின்போது தேவையான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மற்றைய ஆறு ஆண் வேட்பாளர்களை வெற்றிகொண்டு எட்டு வருடங்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒலிம்பிக் தலைமையகத்தில் இசை ஒலியுடன் உத்தியோகபூர்வ பதவி ஒப்படைப்பு விழா ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முன்னாள் தலைவர் தோமஸ் பெக்குக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் கௌரவாஞ்சலி காணொளி திரையிடப்பட்டது, அதில் பல ஆண்டுகளாக அவரது தலைமைத்துவத்தை சுருக்கமாகக் கூறும் படங்கள் நிறைந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் தோமஸ் பெக் தனது உரையை ஆரம்பித்தார்.

‘இன்று நன்றியுணர்வின், மகிழ்ச்சியின் நாள். நான் இந்தப் பயணத்தை ஒருபோதும் தனியாக மேற்கொண்டதில்லை. சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை வழிநடத்தின. இது ஒரு எளிதான பயணமாக இருக்கவில்லை, ஆனால், ஒற்றுமையாக இருந்ததன் மூலம் கடினமான தருணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம்’ என ஜேர்மனியின் முன்னாள் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரரான தோமஸ் பெக் கூறினார்.

‘முழு சமூகத்தின் அர்ப்பணிப்பு இல்லாமல் ஒலிம்பிக் இயக்கத்தின் வலிமை சாத்தியமில்லை. ஒலிம்பிக் பெறுமதிகள் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. மேலும் நமக்கு முன்னால் ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது’ என தெரிவித்த அவர் புதிய தலைவரை பாராட்டத் தவறவில்லை.

‘ஒரு புதிய தலைமுறையிடம் கோளை ஒப்படைக்கிறேன். இதன் மூலம் வாய்ப்புகள் நிறைந்த ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. நான் என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன் என்பதை அறிந்து, மன அமைதியுடனும் திருப்தியுடனும் வெளியேறுகிறேன். இது ஒரு மரியாதைக்குரிய மாற்றமாகும். ஒலிம்பியனிலிருந்து ஒலிம்பியன்வரை, கிறிஸ்டியுடன் நாங்கள் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கினோம். அவர் நம்பிக்கையுடனும் தனது தனித்துவமான பாணியுடனும் சர்வதேச ஒலிம்பிக் குழுவை வழிநடத்துவார் என்பதை அறிவேன். புதிய தலைமுறையினருக்கு அவர் ஒரு சக்திவாய்ந்த புதிய குரல். கிறிஸ்டி கோவென்ட்ரியின் சிறந்த கைகளில் ஒலிம்பிக் இயக்கம் இருக்கிறது’ என தோமஸ் பெக் தெரிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் தினமான திங்கட்கிழமை காலையின் முக்கிய தருணத்திற்கு மேடை அமைத்து, கோவென்ட்ரி தனது முன்னோடியுடன் இதயப்பூர்வமான அரவணைப்பில் இணைந்தார். பின்னர் ஒலிம்பிக் இல்லத்திற்கான தங்கத் திறவுகோளை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இது ‘உறுதிப்பாடு, நேர்மை மற்றும் ஒரு ஆற்றல்மிக்க முன்னோக்கு’ ஆகியவற்றால் குறிக்கப்படும் ஒரு ஒப்படைப்பின் வெளிப்படையான அடையாளமாகும் என பாக் நம்புகிறார்.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்டி கொவென்ட்றியின் உரையை அனைவரும் எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர்.

அங்கு பேசிய அவர், பெக் மூன்று தவணைகளைக் கொண்ட பதவிக்காலங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவராக பணியாற்றியதற்காக நன்றி தெரிவித்தார்.

‘மிகவும் கொந்தளிப்பான காலங்களில் அவர் எங்களை ஒற்றுமையாக வைத்திருந்தார். இது எங்கள் இயக்கம், நாம் ஒவ்வொருவரும், அந்த வலை அமைப்பின் ஒரு பகுதியாகும். இது சிக்கலானது, அழகானது மற்றும் வலிமையானது. ஆனால், நாம் ஒன்றாக உழைத்து ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே அது செயல்படும்’ என்று முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை பறைசாற்றினார்.

ஒலிம்பிஸம் ‘மாற்றப்பட வேண்டும் என்பதுடன் புதிய வடிவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கோவென்ட்ரி கூறினார்,.

மேலும் பெக்கின் மரபை நிலைநிறுத்தவும், இந்த புதிய தருவாயில் ஒலிம்பிக் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் குரல் கொடுக்கவும் தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார். அவர் உறுப்பினராக இருந்தபோது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வீரர்கள் ஆணைக்குழுவில் பெக் உரைத்த வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.

‘நீங்கள் எங்களிடம், ‘நீங்கள் அறையின் பின்புறத்தில் இருந்தாலும், உங்கள் கைகளை உயர்த்தப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன். அத்துடன் நான் உங்கள் குரலையும் கேட்க விரும்புகிறேன்’ என்று சொன்னீர்கள். அது விளையாட்டு வீரர்களாக எங்களுடன் இருந்தது’ என கொவென்ட்றி கூறினார்.

தனது குடும்பத்தினருடன் வருகைதந்திருந்த சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் தங்கள் கனவுகளை அடைய ஒவ்வொரு நாளும் செய்யும் தியாகங்களுக்கு நன்றி தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸிலும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கிலும் ஒலிம்பிக் சம்பியனானபோது அவர் செய்தது போலவே இதுவும் நடந்தது. கொவென்ட்ரி ஒலிம்பிக்கை ‘ஊக்கமளிக்கவும், வாழ்க்கையை மாற்றவும், நம்பிக்கையை கொண்டு வரவும் ஒரு தளம்’ என்று விபரித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் முதல் பெண் பிரதிநிதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

‘சிறு பராயத்திலிருந்தே எனது பாட்டிமுதல் எனது அம்மாவரை என்னைச் சுற்றி வலிமையான பெண்கள் இருந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்’ என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆறு வயதுடைய எல்லா, ஏழு மாத குழந்தை லில்லி ஆகிய தனது பிள்ளைகள் முன்னிலையில் பேசிய அவர், ‘அவர்கள் தனது தூண்கள் மற்றும் உத்வேகம்’ என்றார்.

ஒலிம்பிக் மகிமையை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு கனவு கண்டதிலிருந்து தனது வாழ்க்கை எவ்வாறு பரிணமித்தது என்பதை நம்பவே முடியவில்லை என்று கொவென்ட்ரி கூறினார்.

‘எதிர்கால சந்ததியினர் தங்கள் கனவுகளை அடைய ஒரு தளத்தை உருவாக்குவது எவ்வளவு அதிர்ஷ்டம்’ என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் ஒலிம்பிக் இயக்கம் என்பது ‘பல விளையாட்டு நிகழ்வுகளுக்கான தளத்த்துக்கும் மேலாக ஒரு முக்கிய விடயம்’ என அவர் வலியுறுத்தினார்.

இந்த இயக்கத்தின் பாதுகாவலர்கள் நாங்கள். இது ஊக்கமளிப்பது, வாழ்க்கையை மாற்றுவது மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருவது பற்றியது’ என்று அவர் கூறினார்.

பதவி மாற்றங்களின் இறுதி செயலாக, பெக்கின் கௌரவ ஒலிம்பிக் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் தங்கத்திலான ஒலிம்பிக் உயர் விருதை கிறிஸ்டி கொவென்றி வழங்கிவைத்து பாராட்டி வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here