சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த மே மாதம் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
தனி விமானம் மூலம் வாஷிங்டன் அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்துக்கு நேற்று வருகை தந்த ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றார்.
வெளிநாட்டு தலைவர்கள் வெள்ளை மாளிகைக்கு வந்த பின்னர் அவர்களை வரவேற்பதுதான் ட்ரம்பின் வழக்கமான நடைமுறை. இதற்கு மாறாக, ஜி ஜின்பிங்கின் விமானம் தரையிறங்கும் இடத்துக்கே ட்ரம்ப் சென்று வரவேற்றது அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இன்று வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்குக்கு அரசு முறை விருந்து அளிக்கப்படுகிறது. மேலும், பல அரசு முறை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுதல் ஆகியவை இடம்பெறும்.
பின்னர் நடைபெறும் கருப்பு உடை விருந்தில் என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கு முன்பாக, ட்ரம்ப்பும், ஜி ஜின்பிங்கும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாளை ஜி ஜின்பிங்கும், அவரது மனைவி பெங் லியுவானும் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் சென்று ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப்புடன் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.
பின்னர், வாஷிங்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் அவர்கள் செல்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்களை அவர்கள் பார்வையிட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.




