அட்டன் மல்லியப்பு சந்தி பஸ் நிறுத்தும் தரிப்பிடத்திலிருந்து 1 கிலோ மீற்றர் வரை வீதியின் இடது புறத்தில் வீதி பாதுகாப்புக்கு சிறிய தூண்களே காணப்படுகின்ற நிலையில் உரிய முறையில் பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியானது ஏறக்குறைய 50 தொடக்கம் 300 அடி வரையிலான பள்ளங்களைக் கொண்டு காணப்படுகிறது.இதனால் இப்பகுதிகளில் பிரயாணம் செய்யும் போது வாகன சாரதிகளும், பிரயாணிகளும் மிகுந்த அச்சம் அடைகின்றனர்.
அத்துடன் வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் வாகனங்கள் வீதித் தடுப்பு கற்களை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அண்மையில் ஹட்டனிலிருந்து கண்டிக்குச் சென்ற பஸ் இப்பகுதியில் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்ததோடு மேலும் இம்மாதம் கொத்மலை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 24 உயிர்களை காவு கொண்ட குறித்த பாதையிலும் வீதி பாதுகாப்பு வேலி காணப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பாரிய பள்ளங்கள் காணப்படும் இடங்களுக்களுக்கு இரும்பிலான பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் பாரிய விபத்துகளிலில் உயிர்கள் காவுகொள்வதை தடுக்க முடியும்.
எனவே ஹட்டன் நகர சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தாமதமின்றி இதனை கவனத்தில் கொண்டு இரும்பு தடுப்பு வேலிகளை இவ் வீதியில் அமைப்பதன் மூலம் வீதி விபத்துக்களை,உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன சாரதிகளும் பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.