ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (Transparency International) அமைப்பின் புதிய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கருத்துக்களின் அடிப்படையில். 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொதுத்துறை எந்த அளவிற்கு ஊழல் நிறைந்ததாகக் கருதப்படுகிறது என்பதை இந்த CPI மதிப்பீடு செய்கிறது. உலக வங்கி, உலக பொருளாதார மன்றம். தனியார் இடர் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் (Think Tanks) உட்பட 13 சுயாதீன வெளிப்புற மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. நாடுகள் 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் மதிப்பிடப்படுகின்றன. இதில் 0 என்பது அதிக ஊழல் நிறைந்த பொதுத்துறையையும். 100 என்பது மிகவும் தூய்மையான (ஊழலற்ற) ஒன்றையும் குறிக்கிறது.
இந்த ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) இலஞ்சம். பொது நிதியை தவறாக பயன்படுத்துதல். அரசுத் தரப்பு வழக்குகளின் செயல்திறன், சட்டக் கட்டமைப்புகளின் வலிமை. தகவல் பெறுவதற்கான உரிமை. ஊழலை வெளிப்படுத்துவோர் (Whistleblowers) மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போன்ற பொதுத்துறையின் முக்கிய ஊழல் அபாயங்களை அளவிடுகிறது. இருப்பினும் பொதுத்துறைக்கு அப்பாற்பட்ட பிற வடிவங்களினாலான ஊழல்களை இது கருத்தில் கொள்வதில்லை. 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் (CPI) இலங்கை 35 புள்ளிகளை பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு பெற்ற 32 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் மூன்று புள்ளிகள் என்ற சிறிய அளவிலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் தரவரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த 121 ஆவது இடத்திலிருந்து தற்போது 182 நாடுகளில் 107 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு நிலையான முன்னேற்றத்தை விட தேக்க நிலையையே வெளிப்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் CPI மதிப்பெண்கள் பெரிய மாற்றங்களின்றி. 2024 இலிருந்த 32 புள்ளிகளுக்கும். 2017-2020 காலப்பகுதியில் இருந்த 38 புள்ளிகளுக்கும் இடையிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரு தசாப்தம் முழுவதும் மதிப்பெண்கள் 32 முதல் 38 இற்குள் இருப்பது முன்னேற்றத்தை விட தேக்கநிலையையே காட்டுகிறது. இந்த எல்லைக்குள் ஆண்டுதோறும் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைவிட, சிறிய மாற்றங்களையே குறிக்கின்றன. நிலையான சீர்திருத்தங்கள் பொதுவாகக் காலப்போக்கில் தொடர்ச்சியான முன்னேற்ற போக்கை உருவாக்கும். ஆனால் இலங்கையின் CPI பயணப்பாதையில் அத்தகைய போக்கு இன்னும் தென்படவில்லை.
உலகளவில் ஊழல் அதிகரித்து வருவதாகவும். நிர்வாகங்களின் தர நிலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு குறிப்பிடுகிறது. பல நாடுகள் பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை மையப்படுத்தும் அதேவேளையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புகூறல் தன்மையை வழுவிழக்கச்செய்து வருகின்றன. பல நாடுகள் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நிர்வாகத்தின் இக்கட்டான காலகட்டங்களில் அரசுக்கள் பொறுப்புக்கூறலை எவ்வளவு சிறப்பாகப் பாதுகாக்கின்றன என்பதை இந்த CPI பிரதிபலிக்கிறது. ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் உறுதியாக (resilient) இருக்கும் இடங்களில். ஊழல் அபாயங்களை கட்டுப்படுத்த முடிகிறது. கருத்துக்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களை விட அர்த்தமுள்ள கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உலகளாவிய போக்குகள் சித்தரிக்கின்றன. இலங்கையின் ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) மதிப்பெண்ணில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய அளவிலான மாற்றம் அண்மைய சட்ட மற்றும் நிறுவன ரீதியான மேம்பாடுகளுக்கு நிபுணர்கள் மற்றும் வணிகத் தரப்பினரிடையே கிடைத்துள்ள வரவேற்பை பிரதிபலிக்கக்கூடும். புதிய ஊழல் மற்றும் சொத்து மீட்பு சட்டங்களை (Anti-corruption and asset recovery laws) ஏற்றுக் கொண்டமை மற்றும் சட்ட அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இலங்கையின் இந்த CPI முடிவு. ஊழல் ஒழிப்பு முடிவடைந்து விட்டதைக் குறிக்காமல் ஒரு நிலையான கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கான வாய்ப்பினையே எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வலிமையான நேர்மைப் பாதையை நோக்கிய சமிக்ஞையா அல்லது ஒரு குறுகிய கால மாற்றமா என்பது பொறுப்புக்கூறல். சட்ட அமுலாக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை அமைப்புகள் நடைமுறையில் எவ்வளவு ஆழமாகவும். சீராகவும் மற்றும் சுதந்திரமாகவும் செயல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்தே அமையும். புதிய சட்டங்கள் மற்றும் அமுலாக்க முயற்சிகள் போன்ற முன்னேற்றங்கள். அவற்றின் நீண்ட கால செயல்திறன் மற்றும் நடைமுறைப்படுத்தல் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையிலும், முன்னேற்றம் குறித்த மக்களின் பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதேவேளை முன்மொழியப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்டம் (NGO Bill) நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety Act) மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு போன்ற நிகழ்வுகளும் நிர்வாக சூழலை வடிவமைத்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் சிவில் சமூகத்திற்கான வெளி. ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமான ஆய்வு ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் ஊழலை அர்த்தமுள்ள வகையில் குறைப்பதற்கு அவசியமான காரணிகளாகும்.




