இலங்கை அதிபர் சேவை அதிகாரிகளின் ஆரம்ப சம்பளப் படிகளை முறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சினால் 03/2014 (I) இலக்கமுடைய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2026 மே 11 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைவாக, முன்னதாக நடைமுறையிலிருந்த 03/2014 சுற்றறிக்கையின் 01 ஆம் பந்தியும் அதன் உபபந்திகளும் இரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக அரச சேவை ஆணைக்குழுவின் சம்பளத் தொகுதியின் முதலாம் தொகுதியின், ஏழாம் அத்தியாயத்தின் 05 ஆம் பந்திக்கமைவாகப் புதிய விதிகள் உள்வாங்கப்பட்டு இந்தச் சம்பளத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு அமைய, பல ஆண்டுகளாக அதிபர்களால் கோரப்பட்ட சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், அதிபர்களின் சம்பளத்தை ஒரு பதவி உயர்வாகக் கருதி கணக்கிடுவதற்குத் தேவையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அத்துடன், 2009 நவம்பர் 13 ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளின் முதல் தரம் வரையிலான பதவி உயர்வுச் செயன்முறையை முறைப்படுத்துவதற்கும், இது தொடர்பில் எழுந்திருந்த நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கிலும், அரச சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் விசேட சலுகைக் காலமொன்றை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அதற்கமைய, அதிபர்களின் பதவி உயர்வுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு 2027.12.31 வரையில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருக்கின்றது




