‘GO HOME CHINA’ கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக சாணக்கியன் எச்சரிக்கை

0
121

இலங்கையின் நாடாளுமன்றில் இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், இன்று தமது உரையின்போது சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

இதன்போதே இந்த வாதவிவாதங்கள் ஆரம்பமாகின.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.

தாம் அண்மையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார்.

இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும்.இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச்செய்யவேண்டும்.

அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, சாணக்கியனுக்கு தமது கருத்தை வெளியிட உரிமையுள்ள போதும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் சீனா வீட்டுக்கு போ என்ற கோசம் தொடர்பிலும் ஹர்ச தமது கருத்தை வெளியிட்டார்.எனினும் ஹர்ச டி சில்வாவின் கருத்தை ஆட்சேபித்து சாணக்கியன் குரல் எழுப்பினார்.

எனினும் அவருக்கு சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அனுமதி வழங்காத நிலையில், தமது கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினரான ஹர்ச டி சில்வா, விமர்சனம் வெளியிடமுடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதித்தார்.

இதன்போது இரண்டு தரப்புக்கும் இடையில் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here