JN 1 புதிய கொவிட் பிறழ்வு: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்….

0
108

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடுமுழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”இந்நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் கீழ், உயர் தரத்திலான மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கொவிட் நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது, நாட்டின் நிதி நிலை சீராக முன்னேறி வருவதால், அத்தியாவசிய மருந்துகளை பெற, அரசின் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்கான செயல்முறையை வெளிப்படையானதாக மாற்றும் நோக்கத்துடன், கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கத் தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கணனிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் குறித்த கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் , இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஔடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தர ஆய்வு கூடத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் கொள்திறன், மனித வளம் மற்றும் அதன் கட்டமைப்பு மாற்றங்களை இந்த வருடத்தில் மேற்கொள்ள முடியும்.

தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவில் பதிவாகிவரும் புதிய JN1 கொவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது. தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். JN1 கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், இது தொடர்பாக மாதிரி சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்தியாவில் பதிவாகியுள்ள புதிய கொவிட் பிறழ்வு கொண்ட நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை. ஆனால் கடந்த கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here