விவசாயிகளின் மனங்களை வென்று, விவசாயிகளுக்குப் பாதுகாப்பான வாக்குறுதிகள் மாலையை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், தற்போது விவசாய மக்களை நடுவழியில் அனாதரவாக்கி விட்டுள்ளனர்.
அன்று விவசாயியைத் தெய்வம் என்று கூறி, விவசாயிகளை ராஜாவாக ஆக்கும் எனக் கூறி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சிலர், இன்று விவசாயிகளை அவமதித்து, பழிசுமத்தி, ‘கசிப்புக்காரர்கள்’ என முத்திரை குத்தி வருகின்றனர். செயற்கை விவசாயிகள் எனக்கூறி நாட்டிற்கு இவர்கள் சோறு பெற்றுத் தருவதில்லை என பிரஸ்தாபித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாய மக்கள் ராஜாவாக ஆக்கப்படுவது விவசாயியின் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகக் கூறி, பாரதூரமாக அவமதிப்புகளையும் ஏளனங்களையும் அரசாங்கம் செய்து வருகின்றது.
விவசாயிகளுக்கு இவ்வாறான தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்படும் இக்காலகட்டத்தில், அன்று விவசாய காணிகளுக்குச் சென்று விவசாயிகளின் துயரம், கண்ணீர், வேதனைகள் குறித்துப் பேசி, விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை தற்சமயம் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
🟩 ஒரு கிலோ நெல்லில் 17 ரூபா நட்டம்
தற்போதைய அரசாங்கம் கூறும் விதத்தில், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்ள போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா உத்தரவாத விலையை வழங்கி, தமக்கு இலட்சக்கணக்கில் வாக்குகளை பெற்றுத் தந்த விவசாய மக்களின் ஒரு கிலோ நெல்லுக்கு இந்த அரசாங்கம் 17 ரூபாயை நட்டமாக்கியுள்ளது.
அன்று விவசாய காணிகளுக்கு சென்று நெல் கதிர்களைச் சாப்பிட்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை நாட்டின் சட்டமாக்கும் சட்டமூலங்களைக் கூட கொண்டு வருவோம் என சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூட பகிரங்க வெளிகளில் பிரஸ்தாபித்திருந்த போதிலும், இன்று விவசாயியின் உற்பத்திச் சுழற்சியின் ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
🟩 உத்தரவாத விலை கிடைக்காமையினால் விவசாயிகள் பரிதாபத்தில்
தரமான உரம், விதைகள், விவசாய இரசாயனங்கள் போன்றன உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. உர மானியம் கூடப் போதுமானதாக இல்லை. எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இவற்றின் தரம் குறித்தும் பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, விவசாய உபகரணங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அத்துடன், யானை-மனித மோதல் காரணமாகப் பயிர்களுக்குப் பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தமது நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்யும் மக்கள், நிலையான விலையின்றி இன்று அந்தோ பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இறக்குமதி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.
தயவுசெய்து நெல்லுக்கு உத்தரவாத விலையைப் பெற்றுக் கொடுத்து, உற்பத்திச் செலவை ஈடுசெய்யக்கூடிய விலையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், உர மானியத்தை அதிகரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார். விவசாய உபகரணங்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக விவசாயிகளின் செலவுகள் அதிகரித்துள்ளதால், எரிபொருள் சார்ந்து நிவாரணத்தை வழங்குமாறும், உள்நாட்டு விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சலுகை அடிப்படையிலான இறக்குமதிகளைச் செய்ய வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
🟩 விவசாய மக்கள் பெற்றுத் தந்த ஆணையை மதியுங்கள்!
நெல் விவசாயிகள் மட்டுமன்றி, உருளைக்கிழங்கு, வெங்காய விவசாயிகளின் அறுவடைக் காலங்களில் கூட அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதால், அதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யானை-மனித மோதல் மற்றும் வனவிலங்கு-மனித மோதல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதைப் போன்றே, விவசாய மக்களின் தன்மானத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பாரிய ஆணையைப் பெற்றுத் தந்துள்ளனர். அந்த ஆணைக்கு மதிப்பளித்து விவசாய மக்களுக்கான கடமையை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக்கொண்டார்.
🟩 விவசாய மக்களின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துங்கள்.
அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக விவசாயிகளையும், ஆதரவளித்த மக்களையும் மறந்துவிட வேண்டாம். நமது நாட்டு விவசாய மக்களின் உரிமைகள் மீறப்படும், விவசாய மக்களின் துயரங்களுக்குச் செவிசாய்க்க அரசாங்கம் தவறும் இந்த காலகட்டத்திலேயே, விவசாய மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஆறு அம்ச விவசாய முன்மொழிவுகளை’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். இதில் உள்ள அனைத்து முன்மொழிவுகளையும் ஹன்சாட்டில் (Hansard) பதிவு செய்கிறேன். இந்த முன்மொழிவுகள் குறித்து உணர்வுப்பூர்வமாகவும், அனுதாபத்துடனும் கவனம் செலுத்தி, விவசாய மக்களை அனாதரவாக்காமல் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.
🟩 விவசாய மக்களுக்காக யார் இல்லாவிட்டாலும் நாம் முன்னிற்ப்போம்.
அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், அது மக்கள் ஆணையை மீறும் செயலாக அமையும். குளமும் தாதுகோபுரமும் கிராமமும் மத வழிபாட்டுத் தளமும் என்ற கலாசாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ள விவசாயத்தை அழிப்பது என்பது விவசாயியின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும். அவ்வாறு செய்யாது, இந்நாட்டு விவசாய மக்களைப் பாதுகாத்து விவசாய உரிமைகளை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் விவசாய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.





