இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில் பிணக்குகளுக்கு தீர்வு

0
268

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேலைக்கு செல்வதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இறம்பொடை, புளூபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் பல மாதங்களாக பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்பட வேண்டும், சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட தொழில்சார உரிமைகளை கோரியே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சில் நேற்று (09.08.2023) அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் செல்லமுத்து, புளூபீல்ட் தோட்ட உரிமையாளர், தோட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கு தோட்ட நிர்வாகம் உடன்பட்டுள்ளது, சேவைக்கால கொடுப்பனவும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் மீளப்பெறப்படும் எனவும் நிர்வாக தரப்பால் கூறப்பட்டுள்ளது. எனவே, திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள் என தோட்ட தலைவர்கள் கூறினர்.

அத்துடன், புளூபீல்ட் தோட்ட மக்கள் தொடர்பில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தோட்ட மக்களின் பிரச்சினை, அவர்களுக்கான உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here