மலையக மக்கள் கலாசார மண்டபங்களைக் கோருவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடை வள்ளல்களும் கூட அதனை அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரம் அத்தகைய கலாசார மண்டபங்களுக்குள் மாத்திரம் நாம் பண்பாட்டைப் பேண முடியாது. அது உணர்வோடு கலக்க வேண்டும்.அரசியல் பணிகளில் பங்கேற்பது கூட ஒரு கலாசாரமாக்க் கொள்ளப்படல் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் எம்பி தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பதுளை மாவட்டம் லுனுகலை நகரில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் திகாம்பரத்தின் சார்பாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலகர் மேலும் உரையாற்றுகையில்,
லுனுகலை பிரதேசத்திற்கு மிகவும் ஆர்வத்தோடு வருகை தந்துள்ளேன். இந்த பசறை – லுனுகலை பிரதேசத்திற்கு மலையக வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இரண்டு தேசிய கட்சிகளினதும் தொகுதி அமைப்பாளர்களைத் தமிழர்களாக்க் கொண்ட ஒரே மலையக பிரதேசம். அந்த அளவுக்கு இங்கு மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர்.
இங்கு ஒரு தமிழ் கலாசார மண்டபம் அமைவது மிகவும் பொருத்தமானது. அதனை உணர்ந்த மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்திடம் தனது கோரிக்கையை வைத்து பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் செறிவின் அளவுக்கு, இந்த மண்டபத்திற்கு செலவிடப்படும் ஐம்பது லட்சம் அளவுக்கு, இந்த கூட்டத்தில் மக்களைக் காணக்கிடைக்கவில்லை. அதற்கு அரசியல் பிரிவினைகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் நமது அரசியல் செயற்பாடுகள் ஊடாகவே நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்பதும் ஒரு கலாசார பண்பாடுதான். அதனை மண்டபத்திற்குள் மட்டுப்படுத்திவிட முடியாது.
இனிவரும் காலங்களில் தொகுதி முறையிலான தேர்தல்கள் அறிமுகமாகும்போது பசறை- லுனுகலை பிரதேசங்களை இணைத்து நாம் ஒரு தேர்தல் தொகுதியாக்க் கோர வேண்டும்.அதில் ஒரு ஆசனத்தை மலைகத் தமிழ் மக்களின் சார்பாக நாம் வென்றெடுக்க வேண்டும். அதனை நோக்கியதாக நமது செயற்பாடுகள் அமைய வேண்டும். லுனுகலை அரசியல் ரீதியாக மட்டுமின்றி கலை இலக்கிய ரீதியாகவும் மலையகத்திற்கு புகழ் சேர்த்துள்ளது. லுனுகலை எனும் அடைமொழியுடன் இரண்டு பெண்கவிஞர்கள் தங்களது பெயரை மலையக இலக்கிய வரலாற்றில் பதிவு செய்துள்ளார்கள். அவர்களது பெயர் எத்தனை பேர் ஊரில் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்வியே. இதுபோல் நிகழ்வுகளை நினைவுப்படுத்தி ஊரின் பெருமையை உயர வைப்பதே உண்மையான கலாசார பணியாகும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் பதுளை மாவட்ட அமைப்பாளருமான S.ராஜமாணிக்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(ஊடகப்பிரிவு)