எல்லா மதத்தவர்களும் தரிசனம் செய்யும் சிவனொளி பாதமலை பருவகாலம் எதிர்வரும் 18 ம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த பருவ காலத்தினை பக்தர்கள் மிகவும் பக்தி பூர்வமாகவும்,எவ்வித இடையூறுகளும் இன்றி தரிசம் செய்யும் முகமாக சுற்றாடலை பாதுகாத்து உயிரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் யாத்திரிகர்களால் சுற்றுப்புற சூழுலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் வீசி எறியப்பட்ட உக்காத கழிவு பொருட்களை சிரமதான பணிகள் மூலம் அகற்றும் பாரிய சமூக பொறுப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் குறித்த வேலைத்திட்டம் நேற்று (04) திகதி நல்லத்தண்ணீர் முதல் சீத்தகங்குலை வரை இருமருங்கிலும் வீசி எறியப்பட்ட பிலாஸ்ரிக் பைகள்,போத்தல்கள் உட்பட உக்காத கழிவுகள் அகற்றப்பட்டன. தேசிய சேமிப்பு வங்கியின் மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாண வங்கிக்கிளைகளின் ஊழியர்களால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டம் மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சிரமதானப்பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட கழிவுகள் மஸ்கெலியா பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டன.
மத்திய மற்றும் வடமேல் மாகாண உதவி முகாமையாளர் உபுல் த சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலய முகாமையாளர் சியாணி அப்பு ஆராச்சி மத்திய மாகாண கிளை முகாமையாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த வருடங்களில் சிவனொளிபாதமலை யாத்திரையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலாளவர்களே தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். எனினும் இவ்வருடம் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய யாத்திரிகர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்