“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற முழக்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ளது.
சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, நிலவும் சர்ச்சைக்கிரிய சூழலைக் காரணம் காட்டி, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில்லை என ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட மையம்’ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்க்கட்சிகள், அரசியல் குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவதே தங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது.
தற்போது திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




