தமிழர்களும், முஸ்லிம் சமூகமும் சங்கமிக்க வேண்டும்: சுமந்திரன் அழைப்பு!

0
67

” எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 25 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

” தமிழ் – முஸ்லிம் உறவு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் உயிர் வாயு போன்றது. முழு நாட்டின் சூழ்நிலைக்கும் இது பொருத்தமானது என்றாலும், அதன் வெற்றியோ தோல்வியோ கிழக்கிலே, அதுவும் அம்பாறை மாவட்டத்திலேயே நிச்சயப்படுத்தப்படும் என்பதை பெருந்தலைவர் அஷ்ரப் நன்கு அறிந்திருந்தார்.

தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். ஆனால் அதே சமயத்தில் தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்த ஓர் அடையாளத்தையே அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த நாட்டின் ஆட்சி முறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டும் என்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ‘ஒரு சுயாட்சி தமிழ் அரசும்’ ஒரு ‘சுயாட்சி முஸ்லிம் அரசும்’ நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சி யாப்பில் ‘நோக்கம்’ என்ற தலைப்பின் கீழ் விதி 2 இலேயே கூறியுள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களாக ஒன்றாகப் பயணித்தாலும், இரு சமூகங்களினதும் தனித்துவத்தை மதித்து அதற்கு இடமளித்து இணைந்து செய்கின்ற பயணமாக அது இருக்க வேண்டும். இணைந்து செயற்படுவது அத்தியாவசியம். ஆனால் அந்த இணைவு பரஸ்பரம் எமது தனி அடையாளங்களை மதித்து அவற்றை வெளிப்படுத்துகின்ற விதமான அலகுகளையும் நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.”- என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here