றொரண்டோ (Toronto) நகரம் வாங்கிய ஆயிரக்கணக்கான பிபா உலகக் கிண்ண (FIFA World Cup) போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை லாபத்திற்கு மறுவிற்பனை செய்யும் முடிவை, அந்த நகரின் மேயர் ஒலிவியா சௌ (OliviaChow) நியாயப்படுத்தியுள்ளார்.
போட்டியை நடத்துவதற்கான செலவுகளை ஈடுகட்டவும், வரி செலுத்துவோரின் பணத்தை சேமிக்கவுமே இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நகர நிர்வாகம் தனக்குள்ள சலுகையைப் பயன்படுத்தி 3,500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி, அவற்றை பெருநிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு இலாபத்தில் விற்றுள்ளது.
இந்த வருவாய் மூலம் பொதுமக்கள் மீது நிதிச்சுமை ஏதும் விழாது என மேயர் சௌ கூறியுள்ளார்.
எனினும், இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க நகரங்களின் மேயர்கள் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொடுத்துள்ள நிலையில், மேயர் சௌ டிக்கெட் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பதாக கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட் (Brad Bradford) குற்றம் சாட்டியுள்ளார்.



