மண்ணெண்ணெய் விலை குறையுமா -அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0
123

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் மூலம் 4 ரூபா மட்டுமே இலாபமாக பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பி நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மின் சக்தி, எரிசக்தி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி எம்பி நளின் பண்டார தமது உரையின் போது, நாட்டில் காணப்படும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடுக்கு பின்னால் சர்வதேச சூழ்ச்சி உள்ளதா? என்ற சந்தேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை பெருமளவில் குறைவடைந்துள்ளதால் எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலமாவது அந்த விலை குறைப்புக்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாட்டில் மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. 150 ரூபாவுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுக்க முடியுமான நிலை காணப்படும்போது கறுப்புச் சந்தையில் லீற்றரொன்று 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது தொடர்பில் அமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் குறைந்த விலையில் மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மீனவர்கள் மண்ணெண்ணெய் கிடைக்காது கடலுக்கு செல்வதில்லை. இதனை சர்வதேச சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. அதேவேளை தற்போதைய நிலையில் அனைத்து வகை எரிபொருளையும் 300 ரூபாவுக்கும் குறைவாக வழங்க முடியும். ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here