மலையக மக்களை அரசியல்,சமூக ரீதியாக ஒரு தேசிய இனமாக சுயமரியாதைமிக்க தன்மானமுள்ள சமூகமாகவும் ஈழத் தமிழர்,சிங்களவர்,முஸ்லிம் மக்களுக்கு நிகரான சமூகமாகவும் உருவாக்குவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச மொழி அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.;
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தற்போது இந்தியாவில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பேச்சுவார்த்தை நடாத்துகின்றனர்.அதனுடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.அன்று நான் ஜனாதிபதியோடு மற்றும் பிரதமரோடு எது பேசினாலும் அது அவர்களால் செவிசாய்க்கப்படுவதில்லை.ஆனால் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டால் அவை ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.மேலும் இந்திய பிரதமர் எதிர்வரும் 12ம் திகதி மலையகத்திற்கு வருகின்றார்.அன்று முழு மலையகமும் அணிதிரண்டு அங்கு வரவேண்டும். மலையக தமிழரின் பலம்,சக்தி எமது அந்தஸ்து,அடையாளம் என்பனவற்றை இந்திய பிரதமருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்து காட்ட வேண்டும் எனவே அனைவரும் அன்றைய தினம் அணிதிரள வேண்டும் என தெரிவித்தார்.
கேதீஸ்