பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அரசுக்கு சொந்தமான 20 கோடி ரூபா மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ., சொகுசு காரை தன்னுடன் எடுத்து சென்றதாக, அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் கூறியதாவது, வெளிநாட்டு தலைவர்கள் பாகிஸ்தான் வரும்போது, அவர்கள் பயன்படுத்துவதற்காக, பி.எம்.டபிள்யூ., எக்ஸ் – 5 வகை சொகுசு காரை, 4.50 கோடி ரூபாவுக்கு 06 ஆண்டுகளுக்கு முன் அரசு வாங்கியது. இதில், ‘புல்லட் புரூப்’ மற்றும் ‘பாம் புரூப்’ உள்ளிட்ட நவீன வசதிகளை செய்ய, மொத்தம் 15.50 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பதவி இழந்த இம்ரான் கான், பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறுகையில் இந்த காரையும் தன்னுடன் எடுத்து சென்றுவிட்டார். மேலும், வெளிநாட்டு தலைவர் ஒருவர் பரிசளித்த கைதுப்பாக்கி உட்பட பல்வேறு பரிசுப் பொருட்களையும் இம்ரான் தன்னுடன் எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.