இலங்கையில் இந்நாட்களில் பல வைரஸ் காய்ச்சல்கள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், இன்புளுவன்ஸா அபாயம் நீங்கவில்லை எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நாட்களில் காய்ச்சல், தொண்டை வலி, என்பன காணப்படுமாயின் சிகிச்சை பெற காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
எனவே இன்புளுவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், ஆபத்தான நிலையில் உள்ள முதியோர், சிறு குழந்தைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்கள் குணமடைய சிறிது கால அவகாசம் தேவைப்படுவதுடன், மேலும் முகக்கவசங்களை அணிவதன் மூலமும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் டொக்டர் ரோஹினி வடநம்பி குறிப்பிட்டுள்ளார்.