இலங்கைக்கு பிரித்தானியா உதவிக்கரம்

0
36

இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உணவு மற்றும் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு 8 லட்சத்து 80 ஆயிரம் பவுன்சுகளை வழங்கவுள்ளது.இலங்கையின் கரையோர பிரதேசங்களான மன்னார், சிலாபம், புத்தளம், தங்கல்லை, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கடற்றொழிலாளர்களுக்கு உதவும் முகமாக குறித்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீன்பிடி துறை கடினமான காலகட்டத்தை கடந்துள்ளது எனவும் இந்த துறையில் தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் பிரித்தானிய இந்த முடிவை எடுத்துள்ளதெனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் நிதி உதவி கடற்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியுதவியை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் குறித்த ஆதரவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டியுள்ள அதேவேளை, கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் ஆதரவுகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.கடற்தொழில் இலங்கையின் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ளும் ஒரு மூலமாக காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடந்த ஆண்டு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி இருந்தனர் எனவும் இதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் உணவு மற்றும் விவசாய அமைப்பு உறுதி பூண்டுள்ளது என அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி விமலேந்திர சரண் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here