பிள்ளைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பானது தற்போது பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமையாக மாறியுள்ளது.
இலங்கையின் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது சுமார் 14 லட்சம் பேர் போதியளவு உணவை உண்பதில்லை என மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி வலேபொட தகவல் வெளியிட்டுள்ளார்.
காலை உணவை தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐந்தில் ஒரு பங்கு சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையே சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என உலக சுகாதார அமைப்புகளின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், சிறுவர்கள் தொடர்பாக இலங்கை கட்டியெழுப்பியுள்ள முன்னேற்றம் பின்நோக்கி செல்லும் என்பதுடன் சில நேரம் அது நிரந்தர இழப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பானது தற்போது பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமையாக மாறியுள்ளது.
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக குழந்தைகளுக்கு கடந்த காலங்களை போன்று சத்தான இறைச்சி உணவையும் தாவர உணவையும் வழங்குவதற்கு பெற்றோரால் முடியவில்லை.
இதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் குழந்தைகள் மத்தியில் காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத போஷாக்கு குறைபாடுகள் அதிகரிக்கக்கூடும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக குறைந்த வருமானம் மற்றும் குறைந்த கல்வி அறிவுடைய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளிடையே இந்த நிலைமை மிகவும் மோசமாக இருக்கலாம் எனவும் சுகாதார துறை எச்சரித்துள்ளது எனவும் காமினி வலேபொட மேலும் தெரிவித்துள்ளார்.




