கடந்த ஆண்டில் மாத்திரம் 66 ஆயிரம் பேர் கடும் உணவு பாதுகாப்பற்ற நிலைமையால் பாதிக்கப்பட்டனர்.
இலங்கை மக்கள் தொகையில் 17 வீதமானோர் அதாவது 39 லட்சம் பேர் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.10 லட்சம் பேர் தற்போதும் கடுமையாக உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் கமத்தொழில் மற்றும் உலக உணவுத்திட்டம் என்பன இணைந்து மேற்கொண்ட பயிர், உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவு பாதுகாப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்த ஆண்டில் மாத்திரம் 66 ஆயிரம் பேர் கடும் உணவு பாதுகாப்பற்ற நிலைமையால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூ மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது கடும் உணவு பாதுகாப்பற்ற நிலைமை எதிர்நோக்கியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 40 வீதமாக குறைந்துள்ளது.
உணவு பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைந்தமை, உணவு பயிர் அறுவடை அதிகரித்தமை ஆகியன காரணமாக மக்களின் உணவு பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உணவு பாதுகாப்பற்ற நிலைமை இன்னும் ஒரு மட்டத்தில் இருந்து வருகிறது.
பெருந்தோட்டங்களில் வசிப்பவர்கள், சமுர்த்தி போன்ற சமூக உதவிகளை நம்பி வாழ்வோர், அன்றாடம் கூலியை பெற்றுக்கொள்ளும் தொழிலாளிகள் மற்றும் குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறுபோகம் மற்றும் பெரும் போகங்களில் அரிசி, சோளம் போன்ற தானிய உற்பத்திகள் மூலம் 4.1 மெற்றி தொன் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கடந்த ஆண்டு பயிர்களின் அறுவடையானது 14 வீதமாக குறைந்தது.
அதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 60 வீதமானவர்கள் தமது உணவு தேவையை பூர்த்தி செய்ய பணத்தை கடனுக்கு பெறுவது மற்றும் கடனுக்கு உணவு பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் பணிப்பாளருமான அப்துல் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கும் குடும்பங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் எனவும் பயிர், உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.