ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் சந்திப்பு!

0
11

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா அவர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கை கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) யுகத்தில் மக்களும் திறன்களும்” என்பது மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான கருப்பொருளாக அமைந்திருப்பதுடன், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இது ஆராய்கின்றது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை வலுவூட்டுவதே இந்த மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான நோக்கம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை மேம்படுத்தும் திட்டத்தின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும், பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொது மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அசூசா கொபோடா அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் தெரிவித்தார். அதற்கமைய தற்போதைய புதிய அரசியல் மாற்றத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆய்வு மையமொன்றை விரைவில் அமைக்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இங்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here