சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கச்சதீவை இந்தியாவால் ஒருபோதும் கைப்பற்ற முடியாதென்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் காணிகள் எக்காரணத்துக்காகவும் வேறு நபர்களுக்கு ஒப்படைக்கப்படமாட்டதென்பதுடன், வடக்கில் இனவாதத்தைத் தூண்டும் தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெற்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று (29) விஜயம் செய்திருந்த அவர், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, யாழ் சர்வதேச விமான நிலையத்தில் சில அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. இந்த அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன.
இருந்தபோதும் அதற்கு முன்னர் எதிர்வரும் மாத இறுதிக்குள் விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்காக தற்காலிக இருப்பிடமொன்றை நிர்மாணிக்குமாறு விமான நிலைய தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த நடவடிக்கைகள் ஒரு வாரத்துக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
யாழிலுள்ள அநேகமான காணிகளுக்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் 2015 ஆம் ஆண்டளவில் ஆட்சியிலும் பங்குபற்றியிருந்தார். அந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் எதனையும் செய்ததாக இல்லை. யுத்தக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த அகதியொருவரை கைதுசெய்ததும் குழப்பமடைந்து அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். அதன் பின்னர் நாங்கள் அவ்வாறு இல்லை என்பதையும் உறுதிபடுத்தியிருந்தோம்.
அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களிடம் எவ்வித இனவாதமும் இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சகல மக்களின் உரிமைகளுக்காகவே செயற்படுகிறோம்.
வடக்கிலுள்ள காணிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதற்காக கைப்பற்ற வேண்டும். சுமந்திரன் போன்றோர் அவர்களின் மொழியையும் இன்றும் திருத்திக்கொள்ளவேண்டும். வடக்கு மக்களின் காணிகளை எதற்காக வேறு நபர்களுக்கு கொடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியே வடக்கில் வெற்றிக்கொண்டுள்ளது. அவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை சந்தித்துள்ளதால் மிகவும் மோசமாக இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். வடக்கில் தமிழ் ராஜபக்ஷக்களே தோற்றம் பெற்றுள்ளார்கள்.
ராஜபக்ஷக்களின் இனவாதத்தால் வடக்குக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் தற்போது தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெற்றுள்ளார்கள்.
காணி இல்லாதவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதே எங்களின் திட்டமாகும். யாழ்ப்பாணத்திலுள்ள காணிப் பிரச்சினை என்பது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் மாத்திரம் தொடர்புபடவில்லை. இவை அரசியலினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளாகும்.
2012ஆம் ஆண்டின் பின்னர் மக்களால் அனுபவிக்கப்பட்ட அநேகமான காணிகள் வனப் பாதுகாப்பு சட்டத்தினூடாக கைப்பற்றப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் அந்த செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மிக முக்கியமாக வடக்கில் அதிக காணிகள் அவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன.
எனவே, அமைச்சரவை குழுவொன்றை நியமித்து வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள மக்கள் அனுபவித்த காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
கச்சதீவு சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்துள்ள ஒரு இயற்கை வளம். அதனால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு அரசியல் தேவைகளுக்காகவோ அல்லது தேர்தலுக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு கைப்பற்ற முடியாது. நாங்கள் சர்வதேச சட்டத்தின் கீழே செயற்படுவோம் என்றார்.