கனடாவின் அரோரா (Aurora) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் மரணம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மதியம் 2:45 மணியளவில் வெலிங்டன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் வால்டன் டிரைவ் (Wellington Street East and Walton Drive) பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு வந்த யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police – YRP), படுகாயங்களுடன் இருந்த ஒருவரை மீட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஊடகத் தொடர்பாளர் ஜேம்ஸ் டிக்சன் (Const. James Dickson) இதுகுறித்துக் கூறுகையில், தற்சமயம் கொலைப் புலனாய்வு விசாரணை (Homicide Investigation) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்கள் மீது இன்னும் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் அந்த வீட்டிற்குள் மட்டுமே நடந்த ஒரு தனிப்பட்ட விவகாரமாகத் தெரிவதாகவும், பொதுமக்கள் எவருக்கேனும் இதுகுறித்த தகவல் அல்லது வீடியோக்கள் கிடைத்தால் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




