காவத்தை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தினர் கீழ் இயங்கும், கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் உரிய பராமரிப்பின்றி கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் காடாக்கப்பட்டிருந்த 17 ஹெக்டயர் கொண்ட தேயிலை மலையை, புதுக்காடு தோட்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, இன்று (07) சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுகாடு தோட்டத்தில் நல்ல விளைச்சலை தரக்கூடிய 11ஆம் இலக்க தேயிலை மலையிலேயே, இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 130 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த சிரமதான பணியில், புதுகாடு தோட்டம் உதவி நிர்வாகி டி.ஜே.லக்சிரியும் கலந்துகொண்டு தொழிலாளர்களுடன் சிரமதான பணியில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சிரமதான பணியை முன்னெடுக்கும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு, தேநீர் உபசாரத்தை, புதுக்காடு தோட்ட முச்சக்கர சாரதிகள் சங்கத்தினர் பொறுப்பேற்றுள்ளதுடன், பகல் உணவை, தோட்ட நிர்வாகி பொறுப்பேற்றுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.