கொட்டகலை பிளாண்டேசனுக்கு உரித்தான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கைநிதி சுமார் 437 மில்லியன் ரூபாவை மத்திய வங்கிக்கு அனுப்பாது அப்பணத்தை முடக்கி தோட்ட நிர்வாகங்கள் வைத்திருப்பதாக இ.தொ.கா தலைவரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று முன்தினம் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்திய தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளதாவது:-
தோட்டக் கம்பனிகள் இதுவிடயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. கூட்டு ஒப்பந்த சரத்துக்கள்படி தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியவற்றை உரிய நேரத்தில் மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படாது முடக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு முரணாகும்.
இதனை நம்பியே வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் தமது அந்திம காலத்தில் அப்பணம் அவர்களுக்குத் தேவை. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குறித்த தொகையான 437 மில்லியன் ரூபா எப்போது மத்திய வங்கிக்கு தோட்ட நிர்வாகங்கள் அனுப்பி வைக்கப்போகிறது என்ற ஏக்கத்தில் தொழிலாளர்கள் உள்ளார்கள்.
இதன்படி பத்தனை போகாவத்தை யுனிபீல்ட், மவுண்ட்வேர்ணன், கெலிவத்தை, டிரைட்டன்,மேபீல்ட்,கிரேக்கிளி,பளிங்குமலை, ஸ்டொனிக்கிளிப், அரப்பலாங்கந்தை, டெல்கீத், எதுராகல, கீகனாகந்த, கொட்டியாகெல, மில்லேவா, பாதுக்க, பாயிக்கல, ரைகம, சொரண,அஸ்வெலி, வோகன் போன்ற தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே. இந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில் உள்ளார்கள்.
இது விடயத்தில் கம்பனிகள் காலம் தாமதிக்காது மத்திய வங்கிக்கு குறித்த தொகையை அனுப்ப வேண்டும் அல்லது தாம் சட்ட நடவடிக்கைக்கு தயாராகப் போவதாக தலைவர் முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் தொழில் ஆணையாளர் இவ்வாண்டு இறுதிக்குள் முடக்கி வைக்கப்பட்ட தொகை அனைத்தையும் மத்திய வங்கிக்கு அனுப்பி வைப்பதற்கான உறுதி மொழியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சு வார்த்தையில் இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம், நிர்வாக உப தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, உப தலைவர்களான எஸ்.அருள்சாமி, எம்.வேங்குருசாமி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா