சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும்- குழந்தையை கொன்ற தாத்தா

0
71

சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆபத்து’ என சிலர் கூறியதால்,பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா(21). இவருக்கும், கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(29) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சித்திரை மாதம் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால், தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.இந்நிலையில், குளியலறையில் வாளி தண்ணீரில் சங்கீதாவின் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் கடந்த 14-ம் திகதி அதிகாலை இறந்து கிடந்தது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் பொலிஸார் அங்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது, சங்கீதாவின் தந்தை வீரமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறியதாவது: சங்கீதாவுக்கு சித்திரை மாதம் குழந்தை பிறந்துள்ளதால், தாய்வழி, தந்தைவழி என இரு குடும்பத்தினருக்கும் ஆகாது என்றும், பெற்றோர் அல்லது தாத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வீரமுத்துவிடம் சிலர் கூறி உள்ளனர்.

வாக்குமூலம்: மேலும், மகளின் திருமணம், பிரசவம் என ஏற்கெனவே அதிக கடன் இருந்த நிலையில், இந்த குழந்தை இருந்தால் இன்னும் கூடுதல் கடன் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதியதால், குழந்தையை துணியில் சுற்றி வாளி தண்ணீரில் அழுத்தி கொன்றதாக வீரமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here