சிறுபான்மை மக்களை புறக்கணித்தால் கடந்த ஆட்சிக்கு நடந்ததே நல்லாட்ச்சிக்கும் நடக்கும்; அமைச்சர் ராதா எச்சரிக்கை!

0
114

நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (09.11.2017)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரிகளும் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள்.குறிப்பாக பொது மக்களை அழைக்களிப்பதில் இவர்களை போல செயற்பட முடியாது.எனக்கு அரசாங்க வர்த்தமாணி மூலம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அது எதுவுமே செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது.எங்களுடைய அமைச்சரும் அதனை கண்டு கொள்வதில்லை.இது தொடர்பாக நான் பலமுறை அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

அதே போலவே அதிகாரிகளும் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள். நான் ஒரு தமிழ் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறு செயற்படுகின்றார்களா?என்ற கேள்வியும் எனக்கு எழுகின்றது.நான் கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் பொறுமையாக இருந்தேன்.

எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் நான் இராஜாங்க அமைச்சராக இருப்பதில் எந்தவிதமான பயனும் எங்களுடைய மக்களுக்கு கிடைக்காது.நான் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தேன்.இதனை தொடர்ந்து செய்ய முடியாது.

சிறுபான்மை மக்களின் ஆதரவோடு அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்டாயமாக சிறுபான்மை மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும்.என்னிடம் வருகின்ற மக்கள் மிகவும் தூர இடங்களில் இருந்து வருகின்றார்கள் அவர்களுடைய வேலைகளை கால தாமதம் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

ஆனால் அதனை எந்த ஒரு அதிகாரியும் புரிந்து கொள்வதில்லை.எனவே இந்த நிலைமை தொடர்ந்தால் எங்களுடைய கல்வி நிலைமை இன்னும் பாதிப்பிற்குள்ளாகும்.அதனை அனுமதிக்க முடியாது.இது தொடர்பாக எதிர்வரும் 23 ஆம் திகதி முழுமையான தகவல்களை பாராளுமன்றத்தில் எனது உரையின் பொழுது தெரிவிக்க தீர்மானித்திருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பா. திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here