அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப உலக வங்கியின் நிதியுதவியுடன் பெருந்தோட்டப்பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறயதாவது .
எமது பெருந்தோட்ட சமூகத்தைப் பொறுத்த வரையில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதர வசதிகள் குறைவாகவே உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் திகாம்பரம் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப உலக வங்கியின் நிதியுதவியுடனும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அனுசரணையுடனும்;; தெரிவு செய்யப்பட்ட தோட்டப்பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
இதற்கேற்ப டன்சினன் தோட்டப்பிரிவுகளில் 65.7 மில்லியன் நிதியொதுக்கீட்டில் இந்த மேம்பாட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத்திட்டத்தின் ஊடாக 534 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரும் 356 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகளும் கிடைக்கவுள்ளன.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்