சைட்டத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் வரும்வரை அனைத்தும் இடை நிறுத்தம்!

0
98

பல மாதங்களாக நடைபெறும் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் மூன்று நாட்களாக நடைபெற்ற அரச மருத்துவமனை பணிநிறுத்தம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாக பின்வரும் விடயங்களை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், சைட்டம் நிறுவனம் தொடர்பில் பின்வரும் முறையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படும். அந்த அறிவித்தலில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

– அரச வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்கியுள்ள நிபந்தனைகளை நிறைவுசெய்யும் வரை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதனை நிறுத்துதல் மற்றும் பட்டம் வழங்குதலை நிறுத்துதல்.

– மருத்துவ கல்விக்குரிய ஆகக்குறைந்த தராதரங்களின் செல்லுபடியாகும் தன்மை சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனால் மருத்துவ கல்வியின் ஆகக் குறைந்த தராதரத்தை உடனடியாக வரத்தமானியில் பிரசுரித்தல்.

– இலங்கை மருத்துவ சபையின் தன்னாதிக்கம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்தவொரு நிறுவனத்தினவும், நபர்களினதும் அழுத்தம் இருக்கக்கூடாது.

– சைட்டம் நிறுவனத்தில் தற்போது கல்விகற்கும் மாணவர்களின் பாடநெறிகளை இலங்கை மருத்துவ சபையின் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளுக்கமைய தயாரித்தல் மற்றும் தற்போது பட்டத்தை நிறைவு செய்துள்ள மாணவர்களின் பட்டத்தை இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யக்கூடிய முறைமையை தயாரித்தல்.

– சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுதல்.

இதற்கு மேலதிகமாக சைட்டம் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்து அரச மற்றும் தனியார் ஒருங்கிணைந்த கருத்திட்டமாக செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சைட்டம் நிறுவனத்துக்குரிய மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

சைட்டம் நிறுவனத்துக்கு தேவையான நிதியைப் பெறுவதற்காக பங்குச்சந்தையில் நுழைதல் அல்லது அரச மற்றும் தனியார் நிதியுடனான நிதியத்தை நிறுவுதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்குறித்த விடயங்கள் மற்றும் அதில் உள்ளடக்கப்படாத ஏதாவது சிக்கல்கள் இருந்தால் அவற்றை தீர்த்துவைப்பதற்காக உரிய தரப்பினருடன் புதிய அணுகுமுறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் மேற்குறித்த விடயங்கள் அல்லது அவற்றில் உள்ளடங்காத விடயங்கள் இருப்பின் அவற்றை தீர்த்து வைப்பதற்கு பேச்சுவார்த்தை மூலம் இயலுமை இருப்பதனால் தற்போது விரிவுரைகளில் பங்குபற்றாத பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் விரிவுரைகளில் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தமது எதிர்காலம் தொடர்பிலும் இலவச கல்விக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பெருமளவு செலவையும் கருத்திலெடுத்து இலவச சுகாதார சேவை ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் பொது நோக்கத்தை அடைவதற்காக நடவடிக்கை எடுப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவித்தலில் உள்ளடங்கியுள்ள மேற்குறித்த விடயங்கள் உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள், இருதரப்பு மாணவர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம், நிபுணத்துவ மருத்துவ அலுவலர்கள் சங்கம் மற்றும் இந்த பிரச்சினையில் அக்கறையுடைய ஏனைய தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கருத்திலெடுத்து சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக பிரகடனப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அனைத்து மாணவர்களும் தமது எதிர்காலம் மற்றும் இலவச சுகாதார சேவைக்காக தமது மதிநுட்பம் மற்றும் மனச்சாட்சிக்கமைய விரிவுரைகளில் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. பணிப்புறக்கணிப்பை முடிவுறுத்தி சேவைக்கு சமூகமளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here