நுவரெலியா – இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 14 வீடுகளைக் கொண்ட குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது.
இதனால் 14 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர்.
மேலும், இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ந்தும் ஒன்றரை வருடங்களாக குறித்த கூடாரங்களில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் வாழும் தற்காலிக கூடாரங்களில் குடிநீர், மின்சாரம், மலசலக்கூடம் ஆகியன முறையாக இல்லாத காரணத்தால் தினந்தோறும் இவர்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள வீடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், வீடுகள் கட்டப்பட்டுள்ள பகுதிகள் காடாக காட்சியளிக்கின்றது. அத்தோடு, கட்டுப்பட்டுள்ள வீடுகளில் உள்ள சுவர்கள் வெடிப்புற்று காணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் சொல்லன்னா துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
க.கிஷாந்தன்